குறுந்தொகை

 குறிஞ்சி - தலைவி கூற்று

. குறிஞ்சி - தலைவி கூற்று



பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 13 – இல் காண்க.

பாடலின் பின்னணி: ஒருநாள், தலைவனும் தலைவியும் சந்தித்தார்கள். அப்பொழுது, தலைவன் “நான் உன்னைக் கைவிட மட்டேன். விரைவில் உன்னைத் திருமணம் செய்துகொள்வேன்” என்று அவளுக்கு உறுதிமொழி கூறினான். அவன் கூறிய உறுதிமொழியை நம்பிய தலைவி அவனோடு கூடி மகிழச் சம்மதித்தாள். அதற்குப் பிறகு, அவனைக் காணவில்லை. அவனோடு கூடியிருந்தபொழுது அவன் உறுதிமொழி அளித்ததற்கு யாரும் சான்று இல்லையே என்று தன் தோழியிடம் கூறித் தலைவி வருந்துகிறாள். 


யாரும் இல்லைத் தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. 


அருஞ்சொற்பொருள்: பசுமை = செழுமை; ஆரல் = ஒருவகை மீன் ; குருகு = நாரை, கொக்கு; மணத்தல் = கலத்தல்; ஞான்று = பொழுது, காலம்.


உரை: தலைவன் என்னோடு கூடியிருந்த பொழுது அதற்குச் சான்றாக வேறு ஒருவரும் அங்கு இல்லை. தலைவனாகிய கள்வன் மட்டுமே அங்கு இருந்தான். என் தலைவன் கூறிய உறுதி மொழிகள் பொய்யானால் நான் என்ன செய்வேன்? ஓடும் நீரில் வரும் ஆரல் மீனை உண்ணுவதற்காகப் பார்த்து நிற்கும், தினையின் அடியைப் போன்ற, சிறிய செழுமையான கால்களை உடைய, குருகு மட்டுமே அங்கே இருந்தது.



விளக்கம்: ஆரல் மீனை உண்ணும் குருகுபோல், தலைவன் தலைவியைக் கூடினான் என்பது உள்ளுறை உவமமாக இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. யாருக்கும் தெரியாமல் தன்னைத் தலைவன் கூடியதால் அவனைக் ”கள்வன்” என்று தலைவி குறிப்பிடுகிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெற்றி நமதே

வெற்றி நமதே முதுகலை ஆசிரியர் தேர்வு TET,TNPSC Loading…