தமிழ் தேசிய அரசியல் நூல்( திருக்குறள்)

வேத-வர்ணக் கருத்தியலையும், அறிவியலையும், அரசியலையும் எண்ணற்ற நூல்கள் மூலமும் சடங்குகள், குறியீடுகள் மூலமும் அரசரிடமும், மக்களிடமும் கொண்டுசெல்லக் கட்டுக்கோப்பான ஒரு அறிவுச் சாதியார் ஒற்றுமையுடன் பெருமுயற்சி செய்து கொண்டிருந்த காலத்தில் திருவள்ளுவர் தம் தத்துவப் புரட்சியை நடத்தினார்.தமிழ்மொழியை நம்பி, தமிழ் அரசரையும் மக்களையும் நம்பி. பல முனைகளில் நடத்தப்பட்ட தாக்குதலை ஒரே நூல்மூலம் எதிர்கொள்ள முடிவெடுத்து எழுதியதால்தான் திருக்குறளின் அமைப்பும் யாப்பும் தனிச் சிறப்பான தன்மையோடு உள்ளன எனக்கருதுகிறேன். அதன்மேலோட்டமான எளிமை காரணமாகவும், சுருங்கிய வடிவம் காரணமாகவும் அதன் முழு ஆழத்துக்கும் செல்வது கடினமானதாக அமைகிறது. இல்லையேல் பரிமேலழகர் உரைதான் சிறந்தது எனும் கருத்து வலிமை பெற்றிருக்க வாய்ப்பில்லை. திருக்குறள் படிப்பவர்க்குத் தக்கவாறு பொருள் தரக்கூடியது என்ற தவறான கருத்து பலரைக் கவர்ந்துள்ளது.அதிலும் பின்-நவீனம் போன்ற போலித் தத்துவப் பார்வைகள் மேலோங்கிவிட்ட இன்றைய அகவயமான (subjectivist) சிந்தனைச் சூழலில் திருக்குறளை வைத்து ஒரு “சொல்லாடல்” விளையாட்டுப் போட்டி நடத்துவதால் சிலருக்கு சுகம் உண்டாகிறது. இவர்களை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லை.ஆனால் அறிஞர் ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் கூட திருவள்ளுவர் அவ்வப்போது பல்வேறு விடயங்கள் பற்றி எழுதியவற்றைப் பல வண்ண மலர்களாகப் படைத்துத் தொகுத்தாரோ எனத் தமது ஐயப்பாட்டை வெளியிட்டுள்ளார். இத்தகு கருத்துகளைப் பார்க்கையில் இன்றுவரை நிகழ்ந்துள்ளகுறள் ஆய்வின் போதாமை வெளிப்படுகிறது. வேறுபட்ட பல துறைகளை ஓரளவு பயினறதாலும், உலக அளவில் அண்மைக்கால ஆய்வுகளை ஒருவாறு தேடி அறிந்ததாலும், இவற்றுடன் கூட எந்தச் சமூக மேம்பாட்டுக்காகவும், உய்வுக்காகவும் வள்ளுவப் பேராசான் போர் செய்தாரோ அதே தமிழ்ச் சமூகத்தின் அடிநிலை மக்கள் மத்தியில் நெடுங்காலமாகத் தொண்டாற்றிப் போராடியும் வந்ததால்தான் நான் வள்ளுவத்தின் ஆழம் பற்றி எழுதத் துணிந்தேன். இதில் அண்ணல் அம்பேத்கரை எனது முன்னோடியாகக் கொண்டேன். இனி திருக்குறள் அமைப்பை ஊன்றிப் பார்ப்போம். திருவள்ளுவரின் மெய்யியல் குறித்த கொள்கை துறவறவியலின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ளது. இது குறித்த விளக்கத்தை நான் முன்னம் ஒரு கட்டுரையில் தந்துள்ளேன். (மருதமுத்து, “திருக்குறளில் சமணமா?”, கட்டுரை, “ கணையாழி” ஏடு, ஆகஸ்ட், 1996; மறுவெளியீடு: “வள்ளுவம்”, ஆய்வேடு, மே-சூன்,1999) ஈழத் தமிழரும் பேரறிஞருமான பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை (சமயத்துறை, அரிசோனா பல்கலைக் கழகம், அமெரிக்கா) அவர்களும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார். (ஆ.வேலுபிள்ளை, “தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்”, பாரி., மூன்றாம் பதிப்பு, 1985, பக்கங்கள்: 62,63). இவரும் இந்த நூற்பகுதியில் தான் வள்ளுவரின் பெய்யியல் கோட்பாடுகள் அமைந்துள்ளன என்கிறார். ஆனால் அறிஞர் வேலுப்பிள்ளை திருவள்ளுவரின் மெய்யியலில் சமண தத்துவத்தைக் காண்கிறார்.இது முற்றிலும் தவறாகும். வினை நீங்குதலே சமணத்தின் இறுதியான மெய்யியல் இலக்கு. புத்தரின் இலக்கோ அவா அறுத்தல் என்பது. அத்துடன் “மனத்துக்கண் மாசிலன் ஆகுதல்” என்பதும் புத்தரால் வலியுறுத்தப் பட்ட அடிப்படைத் தத்துவம். ஆனால் சமணர்க்கு இவ்வாறு மனத் தூய்மை மட்டும் போதவே போதாது.வினைத் தூய்மையே தலையாயது. செய்கையில் குறைபாடுகள் வரும், செய்பவனது நோக்கம் மாசற்றதாக இருப்பதுதான் முக்கியம் என்ற புத்தரின் நிலைப்பாடு இல்வாழ்வார்க்கு ஏற்ற தத்துவம், (importance of integration). மகாவீரர் ஒவ்வொரு செய்கையிலும் இம்சை தவிர்க்கப் படவேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தியவர்.எனவே சமணத்தில் துறவோர் (படிமையோர்) மட்டுமே ஈடு இணையற்றவர்கள். இது இல்வாழ்வாரை வெறும் பக்தி நிலைக்குத் தள்ளுவதாகும். “வினைநீக்கமா, அவா அறுத்தலா?” என்ற கேள்வி மூலம்தான் சமணர் வழியா, புத்தர் வழியா என்று தெளிய முடியும். திருவள்ளுவரின் நிலைப்பாடு என்ன? அறத்துப்பாலில் துறவறவியலின் இறிதிப் பகுதி நான்கு அதிகாரங்களைக் கொண்டதாக அமைக்கப் பட்டுள்ளது: “நிலையாமை”, “துறவு”, ”மெய்யுணர்தல்”, “அவா அறுத்தல்” ஆகிய நான்கும் உள்ளார்ந்த தொடர்புகளோடு, தொடர்ச்சியாக ஒரு தத்துவ முழுமையைத் தருகின்றன. “ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்”, என இந்த மெய்யியல் பகுதி முடிகிறது. (இதற்கடுத்த ஊழ் அதிகாரம் உலகை இயக்கும் பொது விதி பற்றியதாகத் தனி நிலையில் வைக்கப்பட்டுள்ளது.) ஆக பார்ப்பனிய உரையாசிரியர் பரிமேலழகரும், சைவர்களும், சமணர்களும் உரிமை கொண்டாடுவது போல் திருவள்ளுவர் இந்தப் பிரிவினர் எவருடைய சமய தத்துவத்தையும் ஏற்றவர் அல்ல.”சரி, யாருக்கும் வேண்டாம், பொதுவான தத்துவம் படைத்தார் என்று வைத்துக் கொள்வோம்”, என்று பேசும் சிலரும் தந்திரமாக புத்தரை விலக்கி வைத்து விட்டால் போதும் என்று நினைத்தே அவ்வாறு பேசுகிறார்கள். ஏன் எனில் புத்தரின் வர்ண - சாதிமறுப்புக் கொள்கையை அன்னார் கடுமையாக வெறுக்கிறார்கள்.இப்படி வெறுப்போருள் பார்ப்பார் அல்லாத மேல்சாதியினரும் அடங்குவர். ஆனால் திருக்குறளில் மெய்யியல் பகுதி மிக வெளிப்படையாகவும் தெளிவாகவும் உள்ளது. நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவா அறுத்தல் ஆகிய நான்கையும் புத்தரின் வாழ்க்கையின் முக்கியமான நான்கு கட்டங்களாகக் காணமுடியும். இளவரசன் சித்தார்த்தன் நிலையாமைத் துன்பத்தைக் கண்டான். அதற்குக் காரணம் என்ன, தீர்க்க வழி உண்டா என்ற கேள்விகளுக்கு விடை காணத் துறவு பூண்டான். தேடினான். சுய ஒறுத்தலும், தீவிரமான மெய் வருத்தலும் பயன் தரவில்லை. சமணர் வழியை ஒதுக்கினான்.அறிவுவழியில் ஆராய்ந்து மெய்யுணர்வு எய்தினான். காமம், வெகுளி, மயக்கம் எனும் மூன்றையும் விட்டு விடுதலை பெற்றான். தன் விடுதலையோடு நிறுத்திக் கொள்பவன் சுய நலத்தை உண்மையில் துறந்தவனாக இருக்கமுடியாது என்று கண்டு, பிறர் நலம்பெற உழைப்பதே கடமை எனக் கொண்டு, தான் அறிந்த பேருண்மைகளை மறையாக மறைத்து வைக்காமல் அவற்றை அனைத்து உயிர்களும் அறிந்து நன்மை பெற வேண்டிக் கால மெல்லாம் பாடுபட்டான். இதுதான் திருக்குறள் காட்டும் மெய்யியல். பிட்சுக்களிடமும் பௌத்த சங்கங்களிடமும் தன் சிந்தனையை ஒப்படைக்காதவரான திருவள்ளுவர் நேரடியாக புத்தரிடமிருந்தே இந்த அடிப்படை மெய்யியலையும் அறிவியலையும் பெற்றுள்ளார். அக்காலத்தில், புத்தரைப் பின்பற்றியோர் பல்வேறு குழுக்களாகத் தமக்குள் பிரிந்து கிடந்தார்கள் என்றும், அந்தக் குழுக்களுக்குள் பிட்சுகளுக்குக் கொடுக்க வேண்டிய இடம் குறித்தும், இல்லறவாழ்வின் முக்கியத்துவம் குறித்தும் கடுமையான முரண்பாடுகள் இருந்தன என்றும் வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. திருவள்ளூர் இந்தக் குழுக்களின் உள்முரண்பாடுகளில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்பதை அவரது நூல் வெளிப்படுத்துகிறது. புத்தர் கோரியபடி சொந்த அறிவைக் கொண்டு அவரது போதனைகளை சோதித்து அறிய முற்பட்ட திருவள்ளுவர் போன்ற பெரியோர் அன்று ஓரிருவர் இருந்துள்ளனர். நான் முன்பே குறிப்பிட்டது போல பேரரசன் அசோகன் கூட அப்படித்தான் புத்தர் கொள்கைகளை அணுகினான். அவனது அரசின் பொதுதர்மப் பார்வை பிட்சுக்களால் வடிவமைக்கப் பட்டதல்ல. அப்படி அவர்களுக்குக் கீழ்ப் பட்டிருந்தால் அவர்களில் ஒருபிரிவினர் தீவிர நிலை எடுத்து பிற மதங்களை ஒடுக்குமாறு அந்தப் பேரரசனைத் தூண்டியிருப்பர்—இலங்கை பிட்சுக்கள் பலரைப்போல. ஆக, “யான், எனது” என்னும் செருக்கை அறுக்கும் நிலையாமைத் தத்துவம், முற்றுண்மை தேட முயலும் “ முயல்வாரின்” துறவு, முயன்று எய்தும் மெய்யறிவு நிலை,அந்த அறிவினால் உந்தப்பட்டு அவா நீக்கல்--- இது தான் இளவரசன் சித்தார்த்தன் புத்தனான மார்க்கம். இது தான் திருக்குறளின் மெய்யறிவுக் கொள்கையும். துறவறவியலில் தாம் விளக்கும் கொள்கைக்கு ஒரு மனித உருவம் தந்து தமது நூலின் முதல் அதிகாரத்தில் வைத்துள்ளார் திருவள்ளுவர். அந்த மனிதனைக் கடவு நிலையில் கடவுளாகவும் காட்டிப் போற்றுகிறார். அவனை அரசும் மக்களும் போற்றுவதோடு “வழிபடவும்” வேண்டும் என்கிறார். வழிபடுதல் என்பதும் வழிப் படுதல் என்பதும் ஒரே பொருள் கொண்டிருப்பதை தமிழ் லெக்சிகன் மூலம் அறியலாம். ஆக திருவள்ளுவர் காட்டும் கடவுள் ஆதி பகவனாம் புத்தன் என்று அறிகிறோம். தமிழ்க்குடிகள், குறிப்பாகத் தமிழக் அரசர் அந்த அறிவனின் அறிவுவழிச் சென்று பொது அறத்தை நாட வேண்டும் என்பது அவரது போதனை. வள்ளுவர் பிரானின் இந்த நிலைப்பாடு அன்றைய தமிழகத்தை ஆரம்பத்திலேயே பகைவர் நாடாகக் கருதிய சிங்கள தேரவாத பிட்சு சங்கத்தார்க்கு முற்றிலும் எதிரானதாகும். திருவள்ளுவர் காலத் தமிழகத்தில் இலங்கையின் தென்புறத்தில் சிங்கள சிற்றரசர்கள் பிட்சுக்களின் முழு ஆதரவோடு புதிய அரசு ஒன்றை உருவாக்கி, விரிவாக்கம் செய்ய கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இதை ஒரு கட்டத்தில் சோழமன்னர்கள் வன்மையாக எதிர்த்து முறியடித்தனர் என்பதையெல்லாம் சிங்கள பௌத்த நூல் மகாவம்சத்தின் மூலம் அறியலாகும். வடஇந்தியாவில் சாம்ராச்சியம் உருவாகிவிட்ட காலகட்டத்தில், தமிழகத்துக்குத் தென்புறம் இலங்கையில் அனுராதபுரத்தைத் தலைநகராகக்கொண்டு இன்றைய ஈழம் உள்ளிட்ட பெரு நாட்டை சோழ வம்சத்தினர் ஆண்டு வந்தனர். அதற்குச் சிறிதுகாலம் முன்பாக வடநாட்டிலிருந்து புதிதாகச் சென்று இலங்கையின் சிலபகுதிகளில் குடியேறியிருந்த ஆரியச் சிறுபான்மையினர் சோழர்களை வென்று தங்கள் அரசை அனுராதபுரத்தில் நிறுவப் பெருமுயற்சி செய்த காலம் அது. அப்படி ஒரு சிங்கள அரசு உருவாவதைத் தமிழ்நாட்டில் ஆண்டிருந்த சோழர்கள், பாண்டியர்கள் இருவருமே பெரும் அபாயமாகக் கணித்தனர். ஆனால் இருவரும் ஒருமனதாகத் தொடர்ந்து செயல்படவில்லை. மூவேந்தரும் இணைந்த ஒரே தமிழக அரசு என்று ஏற்பட்டிருந்தால் மட்டுமே சிங்களர் வலிமையைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். இத்தகைய பகைச் சூழல் காரணமாக புத்தர் பற்றிய தமிழகம் வாழ் பௌத்தரின் பார்வைக்கும் சிங்கள அரசை உருவாக்க முயற்சி செய்த பௌத்த சங்கத்தார் பார்வைக்கும் கடும் முரண்பாடு நிலவியது. தமிழகத்தின் புத்தர்கொள்கையினர் புதுச்சேரிப்பகுதி, பூம்புகார், நாகப்பட்டினம் போன்ற சில துறைமுகம் சார்ந்த பகுதிகளில் மட்டுமே இருந்தனர் எனலாம். இவர்களின் தத்துவம் சிங்கள பிட்சு சங்கத்தினரின் நிலைப்பாட்டுடன் முரண்பட்டதாக இருந்திருக்கிறது. சிங்கள தேரவாத பிட்சுக்கள் இந்திய பிராமணர் போலவே அரசைத் தங்கள் இரும்புப் பிடிக்குள் வைத்திருக்க ஆரம்பமுதல் பாடுபட்டனர்.தேரவாத பௌத்தம் என்பது மதவாத புரோகித ஆதிக்கத்தை சமூகத்திலும், அரசிலும் நிறுவும் நோக்கம் கொண்டது. வட இந்தியாவில் புத்தரின் மரணத்துக்குப் பிறகு புத்த இயக்கத்தினர் மத்தியில் முதல் பெரும் பிளவு ஏற்பட்ட போதுதான் இந்த தேரவாதம்(ஸ்தவிர வாதம்) உருவானது. அசோகருக்கு முன்பே இந்தப் பிளவு தோன்றிவிட்டது. புத்த இயக்கத்தார் நடத்திய மாநாடு ஒன்றில் பெரும்பான்மையானவர்களின் முடிவுக்கு எதிராக சிறுபிரிவினரான பிட்சுக்கள் தங்கள் சிறப்பு அதிகாரத்தை நிறுவும் நோக்கத்தில் மார்க்கவிதிகளை இறுக்கமாக மாற்ற முனைந்தபோது இல்வாழ்வார் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்த அன்றைய புத்த சங்கத்தில் இந்த புரோகிதத் தனமான சதி முறியடிக்கப்பட்டது. அந்த மாநாட்டுக்கு வந்திருந்த ஏராளமான இல்வாழ்வினர் துறவுகளின் ஆதிக்க முயற்சியை முளையில் கிள்ளினர். இதனால் புத்த சங்கம் இரண்டாக உடைந்தது. பெரும்பான்மையினர் தங்கள் அமைப்பை மகாசங்கிக அமைப்பு (பெரும்பான்மையினர்) என்று அறிவித்தனர். தம்மை அடக்கியாள முயன்ற தேரவாதி பிட்சுக்களை இவர்கள் ஈனயானிகள் (சிறிய மார்க்கம்) என அழைக்கலாயினர். (இந்த இயக்கப் பிளவும் பெயர்களும் ரஷ்யப் புரட்சி வரலாற்றில் போல்ஷ்விக் மென்ஷ்விக் பிளவை நினைவுப் படுத்துகின்றன.) மகாசங்கக் கொள்கைப்படி புத்தர் இறைநிலையில் வைத்துப் போற்றப்படலானார். அவர் மெய்யறிவு எய்திய ஒரு மனிதர் மட்டுமே என்று கூறிய தேரவாத பிட்சுக்களின் நிலைப்பாடு உண்மையில் பகுத்தறிவுக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவத்தால் அல்ல.மாறாக “புத்தரும் ஒரு மனிதர்தான். பிட்சுக்களாகிய எங்களை ஒத்தவர்தான்; பிட்சுக்களாகிய நாங்களும் புத்தர் போலவே அதி உன்னத நிலையை எய்தக் கூடியவர்களே; எனவே அரசும், இல்வாழ்வோரும் மற்றோரும் எங்களுக்கு முற்றிலும் கீழ்ப்பட்டு நடக்கவேண்டும்”. என்று வலியுறுத்துவதே அந்தத் தேரவாதிகளின் அரசியல் உள்நோக்கம். இதை உணர்ந்த மகாசங்கத்தவர்கள் புத்தரின் கடவு நிலையை—ஆதி பகவன் எனும் “தனக்குவமை இல்லாதான்” நிலையை — வலியுறுத்தினர். இதை மேலும் உறுதி செய்து தேரவாத பிட்சுக்களின் ஆதிக்கப் போக்கை அம்பலப்படுத்தவேண்டி இன்னொரு முக்கியக் கோட்பாட்டையும் மகாசங்கத்தவர் முன்வைத்தனர். இதன்படி புத்தர் காட்டிய வழியில் சென்று அவா அறுத்தல் எனும் இறுதி நிலை எய்தி அரஹந்த் (வடமொழியில், “அர்ஹத்”’ தமிழில் “அருகதர் ”>” ஆருகதர்”) எனும் சிறப்புநிலை எய்திய பிட்சுக்கள்கூட குறைபாடு கொண்டவர்களாக இருத்தல் கூடும் என்று மகாசங்கத்தினர் வரையறுத்தனர். இந்த வரையறுப்பின் படி, தலைசிறந்த அரஹந்த நிலை எய்தினாலும் ஒரு பிட்சுவால் புத்தருக்கு இணையாக மாற முடியாது; ஒரு பிட்சு ஒருபோதும் கடவு நிலைக் கடவுள் இடத்தை அடையமுடியாது; ஆதி பகவனின் அடிசேர்ந்தார் என்று தான் ஆகமுடியும். இப்படி பிட்சுவின் இடத்தை இறைக்குக் கீழே வைப்பதன் மூலம், இல்வாழ்வாரும் அரசும் கூட இறைவன் பார்வையில் பிட்சுவுக்கு சமம் என்ற கொள்கையை மகாசங்கிக இயக்கத்தார் நிலைநாட்டினர். (“Six World Faiths”—ed. W. Owen Cole, Continuum Publishers, 2004; “ Buddhist Sects in India”- by NalinakshaDutt, MotilalBanarsidass, 1978; “ Buddhist sects and sectarianism”-by BibhutiBaruah, Sarup&Sons, 2000; “Mahasanghika” at Britannica.com & Wikipedia) இந்த மகாசங்கிகக் கடவுட்கொள்கையை சிங்கள தேரவாத புத்த பிட்சுக்கள் தீவிரமாக எதிர்த்துப் போராடினர். திருவள்ளுவர் இந்த மகாசங்கிகக் கொள்கையைத்தான் அரசுக்கும், இல்லற வாழ்வுக்கும், குடிகளுக்கும், ஒட்டுமொத்த தமிச்சமூகத்துக்கும் அவசியமானது என்று கருதி அதனையே திருக்குறளின் கடவுள்வாழ்த்து அதிகாரத்திலும், நீத்தார் பெருமையிலும் போதித்துள்ளார். இவ்வாறு புத்தர் மட்டுமே தனக்குவமையில்லாத தேவன் என்று போதித்து சிங்கள தேரவாதச் செருக்கை அடக்குகிறார் வள்ளுவர்பிரான். அடுத்து அவர்களின் ஆதிக்கப் போக்கை அடக்கும் நோக்கம் அவருக்கு இருந்ததை நீத்தார் பெருமை என்ற அதிகாரத்திலும் காணமுடிகிறது. இதன் முதலாவது குறட்பாவிலேயே இந்த அதிகாரம் யாரை குறித்தது என்பது தெளிவாக்கப் பட்டுள்ளது. “ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.” நூல்சிறப்பு வேண்டுவோர் ஒழுக்கத்து நீத்தாரின் பெருமையை முதற்கண் போற்றவேண்டும் என்பது இதன் பொருள். பிற்பாடு துறவியலில் “தவம்” என்ற தலைப்பில் பொதுப்படையாக சிறப்பிக்கப்படும் சமணர்,ஆசீவகர், பார்ப்பனமுனிவர் போன்ற பல்வகைத் துறவிகள் பற்றியதல்ல இந்த “நீத்தார் பெருமை”. இந்த இரண்டாம் அதிகாரத்தின் முதல் குறட்பாவில் குறிப்பிடப்படும் ஒழுக்கத்து நீத்தார் யார் என்பதற்குரிய குறிப்பு நூலின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்திலேயே உள்ளது:-- “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார்.” புலன் வென்று முற்றறிவாளனாக, இறையாக உள்ள பகவனின் ஒழுக்க நெறியில் செல்வோர் நீடு வாழ்வார். எனவே கடவுள் வாழ்த்தில் போற்றப்படும் கடவுளின் நெறியே திருவள்ளுவர் போற்றும் ஒழுக்கநெறி. அத்தகைய நெறி நிற்கும் துறவோருள் சிறந்தோர் நீத்தார் அல்லது அரஹந்தர் இது புத்தர் இயக்கத்தோர் அனைவரும் பொதுவாக நம்பிய கோட்பாடு வள்ளுவர் பிரானுக்கும் ஏற்புடையது. ஆனால் சிங்கள தேரவாத பிட்சு சங்கத்தார் கொள்கைக்கு மாறாக திருவள்ளுவர் கொள்கை அமைந்தது. அவர் நம்பிக்கைப்படி அரஹதர் என்பார் எவரும் புத்தருக்கு நிகரில்லை, அடுத்த நிலையிலும் இல்லை அவர்களிடமும் குறை இருக்கும். அவர்கள் இறை நிலை அடைந்தோர் இல்லை; அடையவும் முடியாது. அரஹதரை தலைமையிடத்தில் வைக்க மறுக்கும் இந்த மகாசங்கிகக் கோட்பாட்டை வள்ளுவர்பிரான் தெளிவாக வலியுறுத்தும் குறட்பா ஒன்று அவரால் திட்டமிட்டு இயற்றப் பட்டுள்ளது. அது இதுவே: “குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.” அதாவது நீத்தார் நிலை எய்திய மேம்பட்ட துறவோரிடமும் கணநேரமாவது வெகுளி தோன்றி மறையக்கூடும். கண நேரமேயானாலும் வெகுளி தீயதே. இதனை அடுத்த அதிகாரத்திலேயே (அறன் வலியுறுத்தல்) வலியுறுத்துகிறார்: “அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என்றார் பெருமான். அவ்வாறு நீத்தார்க்கும் சிறிது வெகுளி தோன்றுமானால் அத்துடன் சிறிது அவாவும் பிறகுறைகளும்கூட விளையவே செய்யும். இது உட்கிடை. அதாவது நீத்தாரும் தவறிழைத்தல் உண்டு. இப்படி நுட்பமாக ஒரு முக்கியக் கருத்தை முதலிலேயே அறிவித்துள்ளதற்கு திருவள்ளுவரின் அரசியல் நிலைப்பாடே காரணம்:-- புத்தரின் இடத்தை வேறு எவர்க்கும் கையளிக்க முடியாது. இறைவனின் பிரதிநிதியாக நீத்தார் ஏகபோக உரிமை கொண்டாட முடியாது. அவர்களும் இல்வாழ்வோர் போல பொதுவான அரசுக்குக் கீழடங்கி பொது ஒழுக்க நெறி நின்று நீடுவாழட்டும். இவ்வாறு, வள்ளுவரின் புத்தம் சிங்களபிட்சுக்களுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. அவர்களின் அரசியல் மேலாதிக்க ஆசைக்கு எதிராக உள்ளது. புத்தரை முற்றாக அறிந்து தெளிந்து அவர் வழியில் உலகு செல்லுமாறு பொருள் கண்டு போதித்தவர் தமிழ் வள்ளுவரே. புத்தரை முற்றிலுமாகத் திரிபு செய்து பிட்சுக்களின் அரசியல் ஆதிக்கக் கருவியாக மாற்றி வெறும் பொம்மையாக்கியது தேரவாதமும் , சிறப்பாக சிங்கள பிட்சுக்களுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெற்றி நமதே

வெற்றி நமதே முதுகலை ஆசிரியர் தேர்வு TET,TNPSC Loading…