தொல்காப்பியம்

 செவ்விலக்கியம்


தொல்காப்பியம்


தமிழன்னையின் தன்னேரில்லாத சொத்துக்களுள் தலையாயது தொல்காப்பியம். இதனை ஒல்காப் புலமைத் தொல்காப்பியம்' என்கிறார் மயிலைநாதர் (நன்னால், 359), இது இயற்றமிழ் நூல். தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றின் கட்டமைப்புக்களையும் தமிழினத்தின் தொன்மையான பண்பாட்டு மரபுகளையும் அழியாது பதிவு செய்துள்ள வரலாற்றுப் பெட்டகம் மொழியமைப்பினை விவரிக்கிற முழுமையான நூல்.


தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம்,


"மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த 

தொல்காப்பியன் எனத்தன் பெயர் தோற்றிப் 

பல்புகழ் நிறுத்த படிமை யோனே"


என்று கூறுகிறது. இந்நூலின் ஆசிரியர் தொல்காப்பியன் என்பதும் தொல்காப்பியன் என்பதே நூலுக்குப் பெயராக இடம்பெற்றது என்பதும் இப்பாயிர அடிகளால் தெரியவருகின்றன. தொல்காப்பியன் எனும் பெயர் நாளடைவில் தொல்காப்பியம் என்றுமருவி வழங்கலாயிற்று.


தொல்காப்பியர்


தொல்காப்பியர் அகத்தியரின் மாணக்கர்கள் பன்னிருவருள் தலைமாணாக்கர் என்றும் ஜமதக்கினி முனிவரின் மைந்தரான திரணதூமாக்கினியே தொல்காப்பியர் என்றும் கூறும் வழக்கு உளது ஆனால் புராண இதிகாசங்களில் ஜமதக்கினியின் மக்களான பரசுராமர் முதலியோருடன் திரணதூமாக்கினி காணப்படவில்லை தொல்காப்பியர் வடநாட்டிலிருந்து வந்தவர் எனும் கொள்கை உடையோர் இக்கருத்துக்குச் சொந்தக்காரர். ஆனால்

மு.இராகவையங்கார். இரா. இராகவையங்கார், க.வெள்ளை வாரணனார் முதலியோர் இக்கொள்கையை மறுத்துத் தொல்காப்பியர் தமிழரே என்கின்றனர்.


தொல்காப்பியத்தைத் தொல்காப்பியன் என்னும் பேரறிஞர் இயற்றினார். இந்நூல் நிலம்தரு திருவின்பாண்டியனது அவையில் அதங்கோட்டாசான் என்னும் பெரும்புலவர் தலைமையில் அரங்கேற்றப்பட்டது. முந்தைய இலக்கண நூல்களையும் செந்தமிழ் நாட்டுமொழிவழக்குகளையும் நுணுகி ஆராய்ந்து, மரபு பிறழாமல் புதுமையும் சேர்த்து முறைப்பட ஆராய்ந்து இலக்கணப் புலங்களைத் தொகுத்துத்தருகிறது. இதனைப் பனம்பாரனார் எழுதிய சிறப்புப் பாயிரம் குறிப்பிடுகிறது. இப்பாயிரம் தொல்காப்பியத்திற்குச் சிறந்த மதிப்பீட்டு ஆய்வாகத் திகழ்கிறது. அதங்கோட்டாசானும் பனம்பாரனாரும் தொல்காப்பியர் காலத்தவர்கள்.


"நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து 

அறங்கரை நாவின் நான்மறை முற்றிய 

அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து" (சிறப்புப் பாயிரம்)


தொல்காப்பியரின் காலம் குறித்து வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. நிலம்தரு திருவின் பாண்டியன் காலத்தில் தொல்காப்பியர் வாழ்ந்தார் என்பதற்குப் பாயிரம் சான்றாகிறது.


காலமும் சமயமும்


தொல்காப்பியர் காலம் குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. எஸ். வையாபுரிப்பிள்ளை கி.பி.5ஆம் நூற்றாண்டு என்றும் கே.என்.சிவராசப்பிள்ளை கி.பி. 4ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். இரா.இராகவையங்கார் கி.மு.2ஆம் நூற்றாண்டு; மு.வரதராசனும் சேஷையங்காரும் கி.மு.3ஆம் நூற்றாண்டு; நாவலர் ச.சோமசுந்தரபாரதியார் கி.மு.10ஆம் நூற்றாண்டு, கா.சுப்பிரமணியபிள்ளையும் சி.இலக்குவனாரும் கி.மு.7ஆம் நூற்றாண்டு; வெள்ளைவாரணர் கி.மு.5320; மறைமலையடிகள் கி.மு.2387; உ.வே.சாமிநாதையர்

வியாசர் வேதங்களைத் தொகுத்துப் பகுத்த காலத்திற்கு முற்பட்ட காலம் எனப் பலவாறு அறிஞர்கள் கூறுகின்றனர்.


தொல்காப்பியத்தில் பகர. மகரங்களுக்குக் கூறப்பெற்றுள்ள வரிவடிவம் (உட்பெறு புள்ளி உருவா கும்மே) கி.மு.3ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுச்செய்தியுடன் ஒத்துளது. மேலும், நிலந்தரு திருவின் பாண்டியன் என்பானை மாகீர்த்தி என்றும் இவன் இடைச்சங்க காலத்தவன் என்றும் அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் குறிப்பிட்டுள்ளார். இவற்றின்வழித் தொல்காப்பியம் கி.மு.3ஆம் நூற்றாண்டிற்கு முந்தையது எனலாம்.


தொல்காப்பியர் கேரளத்தை (சேரநாட்டை) ஒட்டிய தென்பாண்டிப் பகுதியைச் சார்ந்தவர் எனபதற்குச் சான்றுகள் பல உள்ளன. அதங்கோடு, ஆசான், அழன் (சழன்), குருளை, பனி, (காய்ச்சல், பனிக்காலம்) கய, வயா, பழுது, பூசை (பூச்சை-பூனை). பாட்டி (பட்டி-நாய்), பல்வேறு மரம் செடிகொடிகளின் பெயர்கள், பனாட்டு (பனைவட்டு, கருப்புக்கட்டி) போன்ற சொற்கள் யாவும் குமரிமாவட்டத்தை உள்ளடக்கிய தென்பாண்டி நாட்டின் பகுதிகளில் வழங்கப்படுகின்றன. மருத்துவம், வீரவிளையாட்டு, கல்வியிற் சிறந்தவரை ஆசான் என்று கூறுதல் குமரிமாவட்ட வழக்கு. மதிப்பிற்குரியவரின் இயற்பெயரைக் கூறுதல் பழந்தமிழக வழக்கு இல்லை. எனவே அதங்கோட்டாசான் மதிப்பிற்குரிய ஒரு புலவர். அதங்கோடு எனும் ஊரின் பெயரால் குறிக்கப்பெற்றுள்ளார். தொல்காப்பியரின் உடன் பயின்றவர் அல்லது ஆசானாக இருக்கலாம்.


தொல்காப்பியம் பழந்தமிழகத்தின் பண்பாட்டுக் குறிப்புக்கள் பலவற்றைப் பதிவு செய்துளது. உயிரினங்களை அறிவின் அடிப்படையில் ஆறுவகை எனக்கூறுதல், சேயோன், மாயோன், வருணன், வேந்தன், கொற்றவை, அந்தணர், அரசர். வாணிகர் (வைசியர்), வேளாளர் எனும் நால்வருணப் பகுப்பு. வெறியாட்டு, சகுனம், சோதிடக் குறிப்பு, வேள்வி முதலிய செய்திகள் பல தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. இவை சமண பௌத்தத்திற்கு உடன்பாடிலாதவை. எனவே தொல்காப்பியர் இவற்றிலிருந்து வேறுபட்ட சமயத்தவர் என்பது தெளிவு. இவரது ஊர் காப்பிக்காடு என்பர்.


நூலமைப்பு


தொல்காப்பிய நூற்பா எண்ணிக்கை இளம்பூரணர் கொள்கைப்படி 1595, நச்சினார்க்கினியர், பேராசிரியர்படி 1611, மர்ரே கம்பெனியார்படி 1602. இங்கு மர்ரே கம்பெனியின் கணிப்பான 1602 ஏற்கப்பெற்றுளது.

தொல்காப்பியம் 1602 நூற்பாக்களைக் கொண்டது. எழுத்ததிகாரம் (483), சொல்லதிகாரம் (463), பொருளதிகாரம் (656) என்னும் 3 பெரும்பிரிவுகள் இதில் உள்ளன. முதற்பிரிவு தமிழ்மொழியின் ஒலி அமைப்பையும், இரண்டாம் பிரிவு சொல், தொடரமைப்புக்களையும், இறுதிப் பிரிவு இலக்கிய அமைப்புக் கொள்கைகளையும் விவரிக்கின்றன. ஒவ்வோர் அதிகாரத்திலும் 9 இயல்கள் என (3 x 9) 27 இயல்கள் இந்நூலில் உள்ளன.


எழுத்ததிகாரத்தில் நூன்மரபு தமிழ் ஒலிகளின் இயல்பை விவரிக்கிறது. மொழிமரபு தமிழ்ச் சொல்லமைப்பை விவரிக்கிறது. பிறப்பியல் தமிழ்ப் பேச்சொலிகள் பிறக்கும் முறைகளை விவரிக்கிறது. புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்னும் ஆறும் தொடரமைப்பில் ஏற்படுகிற ஒலி மாற்றத்தை விவரிக்கின்றன. எழுத்ததிகாரத்தின் 9 இயல்களையும் எழுத்தியல் (நூன்மரபு, மொழிமரபு), பிறப்பியல், புணரியல் என்னும் மூன்றாக வகைப்படுத்தலாம். இம்மூன்றும் முறையே ஒலியனியல், ஒலிப்பியல்,உருபொலியனியல் என்னும் மொழியியலாரின் பகுப்பிற்கு இணையானவை. இக்கால மொழியியலாரின் நுண்ணிய அணுகுமுறையைத் தமிழறிஞர்கள் நெடுங்காலத்திற்கு முன்னரே மேற்கொண்டிருந்தனர் என்பதைத் தொல்காப்பிய அமைப்பும் கருத்துக்களும் புலப்படுத்துகின்றன.

தமிழ் இலக்கண நூல்கள் தொடரிலக்கணத்திக்கும் தனியொரு பிரிவை அமைக்கவில்லை. சொல்லிலணக்கதுள் தொடரிலக்கணம் அடங்கும் என்பது அவற்றின் கொள்கையாகும் தொல்காப்பியமும் சொல்லதிகாரத்தினுள் தொடரிலக்கணத்தை அடக்கி விவரிக்கிறது.


கிளவியாக்கம், வேற்றுமையில் விளிமரபு வேற்றுமை மயங்கியல், இடையியல், எச்சவியல் என்னும் இயல்களும் தொடரமைப்புடன் உறவுடையவை. பெயரியலும் வினையியலும் சொல்லமைப்புக் குறித்தவை. உரியியல் சொற்களின் பொருளை உரைக்கும் அகராதி அமைப்பை உடையது. இந்நாளில் கிடைக்கப்பெற்றுள்ள அகராதிகளுள் இதுவே தொன்மையானது


பொருளதிகாரம் தமிழ் இலக்கியக் கொள்கைகளை விவரிக்கின்றது. இதில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் இயல்கள் உள்ளன. புறத்திணையியல் புற இலக்கியச் செய்திகளைத் தருகிறது. செய்யுளியல் தமிழ்ச் செய்யுள்களின் அமைப்பு, சில இலக்கிய வகைகளைக் கூறுகிறது. மரபியல் இலக்கியத்திற்குப் பயன்படுகிற சொல்வழக்கு, நூல்களின் வகை ஆகியவற்றின் சில மரபுகளைத் தொகுத்துக் கூறுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மொழிக் குடும்பம்

 முதுகலை ஆசிரியர்   தேர்வு  மொழிக்குடும்பம்  DOWNLOAD/பதிவிறக்கு