பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் உள்ள விருதுபட்டி என்ற கிராமத்தில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். இவரின் பெற்றோர் குமாரசாமி, சிவகாமி அம்மாள்.
காமராஜரை ராசா என்றே அவரது தாயார் அழைத்தார். அவர்களின் குலதெய்வமான காமாட்சியின் பெயரையே அவருக்கு சூட்டி அழகு பார்த்தார்.
பதின்ம வயதில் காங்கிரஸ் உறுப்பினர்
நாளடைவில் அது காமராசு ஆனது. தொடக்க கல்வி மட்டுமே பயின்றுள்ள காமராஜர், பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்ட போது அவரது மாமாவின் துணிக்கடையில் வேலை பார்த்தார்.
சுதந்திர தாகமும், விடுதலை தீயும் கொளுந்துவிட்டெரிந்த அக்காலக்கட்டத்தில் காமராஜர், பெ. வரதராசுலு நாயுடு போன்றோர்களின் வீரமிக்க சுதந்திர உரைகளால் ஈர்க்கப்பட்டார்.
தொடர்ந்து தன்னை சுதந்திர போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டார். தனது 15ஆவது வயதிலேயே அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினரும் ஆனார்.
உப்பு சத்தியாகிரக போராட்டம்
இந்நிலையில் 1930ஆம் ஆண்டு மார்ச் மாதம் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட காமராஜர், கைது செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த ஓராண்டு சிறைவாசம் காந்தி- இர்வின் ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்தது.
அதன்பின்னர் விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் காமராஜர் கைதானார். பின்னர் 1940இல் நடந்த சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்ததால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கிருக்கும்போதே விருதுநகர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதம் சிறைவாசம் முடிந்து திரும்பிய காமராஜர் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.
சிறைத் தண்டனை
பதவியை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லையெனில் அந்தப் பதவி எதற்கு என்பதே அவரின் கொள்கையாக இருந்தது. இதை முன்னிறுத்தியே அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்து 1942இல் ஆகஸ்ட் புரட்சி. இதில் காமராஜருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சத்தியமூர்த்தியை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்ட காமராஜர், அடுக்கு மொழியில் பேசுவதில் வல்லவர் அல்ல. ஆயினும் எதார்த்த பேச்சுக்கு சொந்தக்காரர். மொழி புரியாதவர்களும் காமராஜரின் பேச்சை நிதானமாக கேட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.
சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் கட்சியில் செயலாளராக இருந்தார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர்
இந்தியா சுதந்திரம் அடைந்த போது காமராஜர் சத்தியமூர்த்தி வீட்டிலேயே தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். 1953இல் ஆந்திரா பிரிவு, குலக் கல்வி திட்டம் என ராஜாஜியின் மரியாதை மெல்ல சரிந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில்தான், காமராஜர் சென்னை மாகாண (தமிழ்நாடு) முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இவரின் அமைச்சரவையில் எட்டு பேர் மட்டுமே அமைச்சராக இருந்தனர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி. சுப்பிரமணியம் அவரை முன்மொழிந்த பக்தவச்சலம் ஆகியோரையும் காமராஜர் அமைச்சர் ஆக்கினார்.
இந்து அறநிலையத்துறை அமைச்சர்
திமுகவின் கொள்கையை ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்றவர்களான ராமசாமி படையாட்சி மற்றும் மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோரும் காமராஜரின் அரசில் பங்கெடுத்திருந்தனர்.
காமராஜரின் ஆட்சியில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அவர் இரட்டை மலை சீனிவாசனின் பேரனான பரமேஸ்வரனை இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆக்கியது.
கல்வி வளர்ச்சி
தமிழ்நாட்டில் காமராஜரின் ஆட்சிக் காலம் பொற்காலம் என்றால் அது மிகையல்ல. ஏனெனில், ஆங்கிலேயர் ஆட்சியில் 7 சதவீதமாக இருந்த கல்வி, காமராஜர் ஆட்சிக்காலத்தில் 37 விழுக்காடாக உயர்ந்தது. 1960களில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் இந்தத் திட்டம் அதிமுக நிறுவனர் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரால் சத்துணவு திட்டமாக விரிவுப்படுத்தப்பட்டது.
அணைத் திட்டங்கள்
கல்வி மட்டுமின்றி நீர் வளத்துக்கும் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
• பவானித்திட்டம்
• மேட்டூர் கால்வாய்த்திட்டம்
• காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்
• மணிமுத்தாறு
• அமராவதி
• வைகை
• பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்
• சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு திட்டங்கள் ஆகியவை காமராஜர் செயல்படுத்திய திட்டங்கள் ஆகும்.
அதுமட்டுமின்றி குமரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை போக்க மாத்தூர் தொட்டி பாலம் திட்டத்தை நிறைவேற்றினார்.
பொது நிறுவனங்கள்
பொதுத்துறை நிறுவனங்களை பொறுத்தவரை அவர் காலத்தில்,
• பாரத மிகு மின் நிறுவனம்
• நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
• மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
• இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
• நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
• கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
• மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
என ஏராளமான தி்ட்டங்கள் இவரது ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. காமராஜர் தமிழ்நாட்டில் 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். மூன்று முறை முதலமைச்சராக இருந்த காமராஜர், தான் முன்மொழிந்த திட்டத்தின்படி (கே பிளான்- காமராஜர் திட்டம்) தனது முதலமைச்சர் பதவியை துறந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆனார்.
கிங் மேக்கர்
கட்சியிலும் ஆளுமைமிக்க தலைவராகவே காமராஜர் திகழ்ந்தார். நேரு மறைவுக்கு பின்னர் லால் பகதூர் சாஸ்திரியை பிரதமர் பொறுப்புக்கு கொண்டுவந்ததிலும், லால் பகதூர் சாஸ்திரியின் எதிர்பாராத மறைவுக்கு பின்னர் இந்திரா காந்தியை பிரதமர் ஆக்கியதிலும் காமராஜரின் பங்கு அளப்பரியது.
இவரை கிங் மேக்கர் என அழைக்கவும் இதுவே காரணம்.
காமராஜர் குறித்து பெரியார்
காமராஜர் அரசியலில் தூய நேர்மையை கடைப்பிடித்தார். பதவியால் மக்களுக்கு பயன் கிடைக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்தப் பதவி எதற்கு என்ற கொள்கையில் தெளிவாக இருந்தார். கடைசிவரை அதைப் பின்பற்றவும் செய்தார்.
தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும்
ஆகையால்தான் பகுத்தறிவு சுடரொளி தந்தை பெரியார், “தமிழ்நாட்டில் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக இல்லாத மறுமலர்ச்சியை காமராஜர் ஆட்சியில் பார்க்கிறேன். ஊர்தோறும் தொழில் வளம் ஏற்பட்டுள்ளது. இது மூவேந்தர் காலத்தில் கூட நிகழாதது” என்றார்.
எம்ஜிஆர்- கருணாநிதி
“காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி” என்றார் எம்ஜிஆர். “தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர் காமராஜர்” என்றார் கருணாநிதி.!
கறுப்பு காந்தி என அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் காந்தியின் பால் பெருமதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். அவரின் பிறந்ததினத்திலே மறையவும் செய்தார். தமிழ்நாட்டில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக